Wednesday, July 15, 2009

ஒரு பாடலும் சொல்லாத சில சேதிகளும்

தேர்வுகள் முடிந்து
கோடையின் தெறிப்பில்
ரொரண்டோ நகர் மீளல்
கனவொன்றை இடைமறித்தாற்போல்

துப்பாக்கிச் சூடுகள்
பாலியல் வல்லுறவுகள்
விளையும் நகருக்கு
பயணமாதல்
திகிலுடன் நிகழ்வதுண்டு
தவிர்க்கமுடியாமல்

காரில் விரைகையில்
எதிரே வருபவன்
தெரிந்தவனாவென
அவதானிக்கையில்
கவனம் கலைந்துவிடின்
காதினை உரசிவிடக்கூடும்
துப்பாக்கிக்குண்டு

காரில் செல்லல்
தடைசெய்யப்பட்டு
பேரூந்தில் பயணிக்கவென
கட்டளையிடப்படும்
வீட்டில்

இப்படியான பொழுதில்தான்
தற்செயலாய்
சந்திக்க நேர்ந்தது
உன்னை

கல்லூரியில்
கனவுகள் கோர்த்து
காதல் சுகித்து
பின்னொருபொழுதில்
வேண்டாமென வெறுத்தொதுக்கியது
அவ்வளவு இலகுவில்
மறப்பதற்கில்லை

காரணம் கேட்டு
நீ கண்ணீர் மல்கியபோது
இன்னொரு சகியைச் சுகித்தபடி
பனியில் நனைந்ததாயும் ஞாபகம்

வாழ்வுப் பெருவெளியில்
துயரங்களின் மீது
நின்றொரு
களிநடனம் புரியும்
வித்தை கைவந்திருக்கூடும்
இன்றுனக்கு

வளாகம் செல்லும்
அவசரம்
வியர்வையின் ஊற்றெடுப்பில்
கண்மை கசிவு
நெற்றியின் முன்வீழும்
முடிகளின் மீதுன்
வீரல்களின் நடனம்

ஏளனமா மகிழ்வாயென
இனம் பிரித்தறிய முடியா
சிரிப்பொன்றொன்று
உதிர்கிறதுன்னில்
எனைப்பார்த்து

நேற்றைய வாழ்வின்
வேதனைச்சுவடுகள் மறந்து
தெருக்களில்
தோழர்களின் உதிரமுறிஞ்ச
வெறிகொண்டலையும்
மிலேச்சர்களும் நானும்
சற்றேறக்குறைய ஒன்றாயிருந்திருப்போம்
உன் பார்வையில்

என்ன செய்வது
ஞானம் சிலவேளைகளில்
பேரூந்தில் ஏற்படுவதும் விந்தைதான்.