Wednesday, July 15, 2009

தோழியர் கதை

ல்லூரி முடிந்த பிற்பாடு
ஆடவனொருவன் அணைப்பில் இருந்தபொழுதில்...
வெளியே அவனோடு செல்ல
கார் இரவல் கேட்டவேளையில்...
என பலசமயங்களில்
கேட்டதுண்டு நான்:
என்ன உறவு உங்களுக்கிடையில்?

நீ சிரித்தபடி
புனிதக்காதலில் மனமொடிந்துபோனவுனக்கு
எங்கே தெரியும் பெண்களின் உணர்வுகளென
கேலிசெய்ததும் நினைவிலுண்டு

ஒரு நத்தார் நாளின்
முன்பான மாலையில்
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்
அபோர்ஷன் செய்யோணும்
கரங்கள் பற்றி
இப்படித்தான் நீ கேட்டாய்

தோழிக்கு உயிரையும் கொடுப்பேன்
வேசிக்கு கல்தான் எறிவேனென
ஆணதிகாரமும் மரபின் பெருமைகளும்
இழைய இழைய
வெடித்துச் சிதறினேன்

ஒரு கணந்தான்
விரல்கள் நடுங்கிற்று
விலகி நடந்தாய்
கூடவே எங்கள் நட்பும்

படிப்பின் நிமிர்த்தம்
தொலைதூர நகர்வு
புதிய நட்புகள்
இன்னபிற காரணங்கள்
மறந்துபோயிற்று உன்நினைவும்

நாம் சந்திப்பதற்கான
எந்தச் சாத்தியப்பாடும் இல்லாதவொரு தெருவில்
நடந்துவந்துகொண்டிருந்தாய்
குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளியபடி

நடந்தது முடிந்துவிட்டது
இப்போது எப்படி இருக்கிறாய்
இப்படிக் கேட்கலாமென
மனதிற்குள் பல்லிளித்தது
எனக்குரித்தான் முகம்

நெருங்கி விலகினாய்
எந்த சலனமும் இல்லாமல்.

தெளிவாயிற்று:
சுற்றியிருக்கும் மனிதர்களைவிட
உன் சுதந்திரம்
உனக்கு முக்கியமென
இன்றும் நீ இருப்பது.