ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும்
எமக்கு
நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ
எழும் மிடுக்கு
அவ்வாறான மகிழ்வின்சாயல்
கலந்துருகியகணத்தில்
புத்தரையும் காந்தியையும்
குழைத்துப்பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக்கேள்விகளுமில்லாது
சிரித்தபடிவந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக்கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும்
காரணமெனலாம்
பிறகு
எண்ணெய் மணமும்
அணிவகுப்புத்தடமும்
கலந்து பெருக
பீதியில் உறைந்தன
தெருக்கள்
பொழுதெல்லாம் விழிமூடாது
ஊர்களின் அமைதிக்காய்
ஒற்றைக்கால் தவமியற்றியவர்கள்
அதிகாலையில் மட்டும்
துயின்றுபோகும் அதிசயம்
உருக்குலைந்த உடல்கள்
பனிப்புகாரில் மிதக்கையில் மட்டுமே
நிகழ்ந்தன
சாரமும்
கைகள் பின்னே வளைக்கப்பட்டிருக்கும் கோலமும்
விழிகள் வெறித்தபடியிருக்கும் கோரமும்
அரணுக்குள்ளிருப்பவர்கள்
அழிவுகளில்லாது திரும்பிச்செல்லல் கூடாதென
நெஞ்சு விம்மித்தணியும்
எதிர்வீட்டு அக்காவின்
ஆடைக்குள் குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள் முலைகள் திருகி
கூட்டாய்ப்படர்கையில்
அசையாய்ச்சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்
நிகழ்வுகளின் தொடர்ச்சியில்
ஆழ்மனதின் துலங்கல்கள் சிதைவுற
மழலையாகிச் சிரித்தபடி
காணாமற்போனாள் அக்கா
ஓர்நாள்
இப்போது புலம்பெயர்வாழ்வு.
நினைவுகளின் செட்டையைக்கழட்டிவிட்டு
துருவக்கரடியின் தோலான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக்காலம்
நேற்று நடந்தவையெதுவும்
என்னைப்பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத்தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத்தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு
எனினும்..
அவள் முலைகள் சுவைத்து
முயங்கும்பொழுதெல்லாம்
எண்ணெய் பிசுபிசுக்கும்
அமைதியின் மணமும்
குறியென விறைத்து நிற்கும்
துப்பாக்கிமுனையின் நினைவும்
ஏனோ பீறிட்டெழுகிறது
எல்லாவற்றையும் புறக்கணித்து.