காதலே வாழ்வென சொல்லாதீர்கள்
கடைசிப்பரீட்சை பஸ்சிற்காய்
கொடுங்குளிரில் கால்விறைக்க
காத்திருக்கும்
என்னிடம்
சென்று செப்புக;
கனவுடன் கட்டிலில் புரள்பவனிடம்
நினைத்த கணத்தில் வெறிகொண்டு
வெண்பனியை சிவப்பாக்கும்
வித்தையறிந்து
கையில் துப்பாக்கியுடன்
அலைபவனிடம்
கூடவே
கவிப்பேரரசுகள் எழுதிய
காதலையும் அள்ளியெறிக
அவர்கள்
கனவுகளை கைத்துப்பாக்கிகளை
கைவிட்டு
காதலிகளுடன் கைகோர்த்து
திரிதல் நன்று
அறிவின் எல்லைக்கு
அழைத்துச் செல்லாத
பாடப்படிப்பில் எள்ளனவெனும்
உடன்பாடில்லை
எனக்கு
நிற்க,
இவனுக்கென்ன தெரியுமென
முகஞ்சுழுத்து ஒதுக்கியவர்க்காய்
பெண்களுடன் அலைபவன்
கெட்டொழிவானென சபித்தவர்க்காய்
விரும்புதல் விரும்பாமையின்றி
எதிராய்த் தூக்கியது
இந்தப் பட்டப்படிப்பு
இடைநடுவில் கலங்கியதுண்டு
எப்படியிந்த நாலாண்டு
நெடுநதி
கடப்பேனென
வெறும் கோப்பிகளுடன்
நாட்கள் கழிவதும்
இருட்டை வெறித்தபடி
திறந்த புத்தகத்தில்
கண்ணயர்ந்து தூங்குவதும்
அவ்வவ்போது நடப்பதுண்டு
பெற்றோர் உறவுகள்
தொலைவிலிருக்கும் சோகம் நிரவி
நாடோடி வாழ்வா
நமக்கு எப்போதுமென
ஆன்மா பிளிறுவதுமுண்டு
இன்று
அழுகின்றபொழுதில்
ஆதரவூட்டும் தோழியரும்
நெடுநதி தாண்ட
துடுப்பாய் உதவும் தோழரும் இருக்க...
நதியென்ன
கடலும் இனி
கடக்குந் தொலைவிற்காண்.