Wednesday, July 15, 2009

"பசங்க"

அழுது கொண்டிருந்தாள் அமுதா. அருகே கேசவன் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டிருக்க எதிரில் நின்று கொண்டிருந்தார் சுப்பையா வாத்தியார். அவர் கையில் வாடாச்சி மரத்திலிருந்து இலையோடு பறிக்கப்பட்டு இலையுருவப்பட்ட பிரம்பு தயாராக இருந்தது

"'ம்ம் என்ன இழுவுற? எதுக்கு செஞ்சே?'ன்னு கேட்டேன்லே" என்றார் அதட்டும் குரலில் வாத்தியார்

"சார்..நான் வேணும்னு செய்யலை சார், சும்மா வெளயாட்டுக்குத்தான் செஞ்சேன் சார்"

"எனக்குப் பட்ட பேரு சொல்லி வெள்யாடுறதுதான் சும்மா வெளயாட்டா? இவ வேணும்னேதான் என்னைக் கேலி செஞ்சிருக்கா சார்" கேசவன் உறுமினான்

"ஆமா சார். அவளை வுடக் கூடாது" என்றான் பின்வரிசையிலிருந்து கோவிந்தன்

"எலே..சும்மா கெடலே. சவத்து மூதி உன்னாலதான் பிரச்னையே பெருசா போச்சு. வந்தேன்னு வச்சுக்க. குண்டியில விளாறிடுவேன்" என்றார் வாத்தியார்.

"கேசவா, நீ நல்லா படிக்குற பயன்னுதானே உன்னை முன்வரிசையில் வ்ச்சிருக்கேன். பொறவெதுக்கு நீ பொம்பளைப் புள்ள கூடல்லாம் சண்டைக்கு நிக்க?" கேசவனைப் பார்த்து கேட்டார் சுப்பையா

"சார். நான் ஒண்ணும் சண்டை போடலை சார். எனக்கு எங்க மாமா மலேசியாவுலேருந்து பேனா கொண்டு வந்திருந்தாரு சார். அதை நான் காட்டிக்கிட்டு இருந்தேன் சார் நம்ம பசங்க கிட்ட. அப்ப சும்மா இருக்க வேண்டியதுதானே சார்? அத வுட்டுப் போட்டு இந்த அமுதா என்ன செஞ்சா தெரியுமா சார்? "

"என்ன செஞ்ச அமுதா?" வாத்தியார் கேள்வி அமுதாவை நோக்கி திரும்பியது

" சார். நான் ஒண்ணுமே செய்யலை சார். நான் என் கிட்ட இருக்குற பேனா சிங்கப்பூர்லேருந்து வந்ததுன்னு சொன்னேன் சார். அதுக்கு நான் அவன் பேனாவைத்தான் கிண்டல் பண்றேன்னு அவனா நெனச்சுக்கிட்டான் சார்" அமுதா குளறிக் கொண்டே பேசினாள்.

"இல்ல சார்.. இவ வேணும்னேதான் செஞ்சா சார். எனக்குத் தெரியும்" என்றான் கோவிந்தன்.

"அதெப்படிலே தெரியும்?"

"ஆமா சார். இவ கிட்ட ஏது சார் பேனா? இவ கிட்ட பேனாவே இல்லை..அப்படின்னா கேசவனைத்தான சார் கிண்டல் பண்ணியிருக்கா?" ஆவேசமானான் கோவிந்தன்

"ஓ.இவரு பெரிய நாயுடு. கண்டு புடிச்சீரோ? சரி. அதுக்காவ எதுக்குலே 'ஊளைமூக்கு"ன்னு அவளைப் பத்தி போர்டுல பேரு எழுதிப் போட்ட? கேசவனே சுமமா இருக்கும்போது உனக்கென்ன எழவு வந்துச்சு?"

" சார் நான் மட்டுமா போட்டேன்? கந்த சாமி, சிவனடிமை, ஜோசப்பு, காசிம் எல்லாரும்தான் போட்டாங்க?"

"எல்லாப் பயலுவளையும்தான் வெசாரிக்கப் போறேம்ல. கொஞ்ச நேரம் சும்மா கெட." என்று அவனை அடக்கியவர் அமுதாவைப் பார்த்து, " ஏம்மா. நீ வாத்தியார் வீட்டுப் புள்ளை. உனக்கெதுக்கும்மா இந்த வம்பு தும்பு எல்லாம்?"

"சார் நான் சத்தியமா கிண்டல் பண்ணனும்னு பண்ணலை சார். வெளயாட்டுக்கு செஞ்சேன் சார்"

"வெளயாட்டுக்கு செஞ்சா ஏன் சார் அவ தோழி 'கேசவன் புருடா உடுறான்டி'ன்னு சொன்னப்ப சிரிக்கணும்?" இது ஜோசப்பு.

"அதுக்காக அவ நோட்டுப் புஸ்தவத்தை கிழிச்சிட்டா சரியாப் போயிடுமாலே சவத்து மூதி?"

"சார் கேசவனுக்கு ஒண்ணுன்னா எங்களால தாங்க முடியாது சார்" என்றான் சிவனடிமை

"அவனைத் தாங்கிக்கிட்டே இருந்தா தாங்கத்தான் முடியாது. அவனே சும்மா இருக்கும்போது நீ ஏம்லே அமுதா சட்டைல இங்க் தெளிச்ச?"

"சார். நான் இங்க் தெளிச்சாத்தான சார் கேசவன் சந்தோசப்பாடுவான்"

"ஏன்? அவன் உன் கிட்ட அப்படி கூப்பிட்டு சொன்னானா?"

"ஏன் சார் சொல்லணுமா? அவனோட நட்புக்காக இதெல்லாம் நாங்களா செய்வோம் சார்"

"ஆமா. நீங்களா செஞ்சு கிழிச்சீங்க. சும்மா கெடந்த சங்கை ஊதோ ஊதுன்னு ஊதிக் கெடுக்குறதுக்குப் பேரு நட்புன்னு எந்த சவத்து மூதில உனக்கு சொல்லிக் கொடுத்தான்? எலே! ஒரு புள்ள என்னமோ வேடிக்கை பண்றேன்னு தப்பு பண்ணிடிச்சு. அதுக்கு என்ன செய்யணும்? அந்தப் புள்ள கிட்டப் போய் ' இந்த மாதிரில்லாம் செய்யாத. அது தப்புன்னு' சொல்ல வேண்டியதுதானே? அது என்ன பாகிஸ்தான் பள்ளிக்கூடத்துலயா படிக்கி?. உன் கூட இதே பள்ளிக் கூடத்துலதான படிக்கி. சரி. யாரை அந்தப் புள்ள கிண்டல் பண்ணிச்சுன்னு நெனைக்கிறீங்களோ அவனே சும்மாதான் இருக்கான். அப்படியிருக்கும்போது நட்பை நிரூபிக்கிறோம்னு சொல்லி ஒரு புள்ளையை எதிர்த்து இத்தனை பேரு போர்டுல எழுதுறது, நோட்டு பொஸ்தவத்தைக் கிழிக்கிறது, சட்டையில் இங்க் தெளிக்குறதுன்னு சேட்டை பண்ணியிருக்கியளே? வெக்கமாயில்ல? எலே..நல்லாக் கேட்டுக்குங்கலே. நட்புன்னா ஒண்ணா சேர்ந்து கமர்கட்டு முட்டாயும் கலர் சர்பத்தும் குடிக்கிறதும் மட்டுமில்ல. நண்பனே தப்பு செஞ்சா அதத் தட்டிக் கேக்குறதும்தான் நட்பு. அத மொதல்ல புரிஞ்சுக்குங்க. நண்பனுக்குப் பிரச்னைன்னா கூட இருந்து பிரச்னையைத் தீர்த்து வுடுறதுக்கு முயற்சி பண்ணுங்க. கோர்த்து வுட்டு வேடிக்கை பாக்காதீங்க. புரியுதா??."
சொல்லி முடித்து மூச்சு வாங்கியவர் தொடர்ந்தார்

"இதப் பாருங்கல. ஒண்ணாம் வகுப்பு புள்ளைளுவதான் 'சார் நுள்ளிட்டான், பலப்பத்தைப் புடுங்கிட்டான்னு' சும்மா சும்மா சண்டை போடுவாங்க. எட்டாங்கிளாசுக்கு வந்ததுக்குப் பொறவும் அதே மாதிரி 'சார் நுள்ளிட்டான்'னு கத சொல்லிக்கிட்டு திரியாதீங்க. போங்க.போய் கண்ணாமூச்சி வெளயாடுங்க. உங்க பிரச்னையே பெருசா இருந்தா என்னைக்குப் படிச்சு குடுக்குறது? எப்ப பரிட்சை நடத்துறது? என்னைக்கு நீங்கள்லாம் பாஸாவுறது? போங்கலே! போங்க. இனிமே இந்த மாதிரி சண்டை கிண்டை போட்டீங்க. பொறவு மண்டைலயே போடுவேன் ஆமா" மிடுக்காக நடந்து போனார் சுப்பையா வாத்தியார்