வானத்து வீதியிலெ ஓரமாய் அமர்ந்த நான்
மேகங்கள் போக்குவரத்தை மௌனமாய் ரசித்து வந்தேன்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்பு கன்னிகையின் காதலைத் தேடி நின்றேன்
சோலை நாட்டில் வாழ்ந்த போது
சொல்லாமல் வந்தாலும் நில்லாமல் போகமாட்டள்
நெடுநாள் கதை பேசி அன்பாய் அழுதிடுவாள்
நீண்ட எங்கள் சந்திப்பில் நிறைவாய் கரைந்திடுவேன்
பாவிகளின் பொறாமையில் பரிதவித்த காதல் நட்பு
பாலைக்கு வந்தபின் பந்தம் தோய்ந்தது
வானத்து வீதிகளில் வரங்கள் பல கேட்டு
எங்கே அவள் என்று ஏங்காத நாளில்லை
முன்னறிவிப்பின்றி மூர்க்கமாய் வந்திடுவாள்
இரவில் வந்து இடியாய் கத்திடுவாள்
மின்னல்கள் மத்தியிலே களிநடனம் கொண்டிடுவாள்
கோபக் கனல் கொண்டு கொட்டித் தீர்த்திடுவாள்
ஆத்திரப் பார்வையாலே அல்லல் படுத்திடுவாள்
ஏன் இத்தனை கோபம் என்றால்
எங்கே அவனென்று என்னை அழைத்திடுவாள்
காதலன் நான் பார்த்ததெல்லாம் வீதிகளில் அவள் கண்ணீர்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்புக் கன்னிகையின் கால் சலங்கை நாதம் கேட்டேன்
இருப்புக் கொள்ளாமல் விழிகள் வழி தேட
இதயம் கனத்து என் இளமை விழித்து நின்றேன்
பிரிந்து வாழ்ந்தால்தான் பிரியமானவள் புரிவாள்
இழந்து நின்றால்தான் இருப்பதின் தரம் தெரியும்
வருந்தி வாழ்ந்தால்தான் மகிழ்வின் குணமறியும்
வாழ்ந்து இறந்தால்தான் பிறப்பின் பலன் புரியும்
குளிர் என் நெஞ்சை வருட,
குனிந்த அவள் எனை நெருங்க
எழுந்த என் கால்கள் நீந்த
வானத்தில் நான் மிதந்தேன்
ஒருநாள் சந்திப்பு, ஓராயிரம் தவிப்புகள்
வருடம் ஒருமுறைதான் வந்தாலும்
வரண்ட என் நெஞ்சத்தில் வண்ண மழை தூவிடுவாள்
வருடத்து கதைகளை நான் விளக்கமாய் பேசி வைப்பேன்
இயற்கையில் உதிர்ந்த இம்மனிதப் பூக்கள்
இயல்பின் வாழ்க்கையில்தான் இதயம் திறக்கும்
காயம் இல்லா இம்மனித இதழ்கள்
மேக மெத்தைக்குள் ஓர் மெல்லிய சந்திப்பு
கருப்புக் காதலியின் மேனி எனை அணைக்க
கருத்த அவள் கைகளுக்குள் நான் தவழ
எத்தனை நாள் தவிப்பு, அழுத அவள் விழிகளுக்குள்
என் ஆன்மாவைத் தேடி நின்றேன்
மழையாய் கரைந்தாள் மானிடம் செழிக்க
அவளில் குளித்தேன் மன அழுக்குகள் நீங்க
இயற்கையில் தோய்ந்து நான் என்னுள் எழுந்தேன்
இறைவன் அருகில் என் இருப்பிடம் தேடி