நான் சூரியன். சுடுவதில்லை
என் பார்வையில் சூடு இருக்கும்
சுகமான அன்பும் இருக்கும்
சூரியன் சுட்டு யாரும் செத்ததில்லை
காற்றின் கடுமையில்
காற்றிழந்தவர் பலர் உண்டு
நீர் விழுங்கி நிலமிழந்தோர் பலர் உண்டு
நெருப்பின் வெறுப்பிற்குள்
சாம்பலானவர் சிலர் உண்டு - ஆனால்
சூரியன் சுட்டு செத்தவர் யாருமில்லை
நான் ஒளிமயமானவன்
என் ஒளிதான் உன் கண்களின் உயிர்
மனிதா! இருட்டில் நீ இரட்டிக்கின்றாய்
ஒளியில்தான் நீ நீயாகின்றாய்
என் ஒளிதான் உன் வாழ்வின் பயிர்
நான் தினமும் வருவேன்
எனக்காக உலகம் விழிக்கும்
என் வருகைக்காக இவ்வுலகம் காத்திருக்கும்
எல்லோர் வீட்டிலும் நான் அழையா விருந்தாளி
ஆனால் என் வீட்டிற்கு யாருமில்லை
எனக்கு உன்னையும் தெரியும்
உனக்கு அப்பாலும் தெரியும்
எனக்கும் ஓர் வருத்தமுண்டு
என் கண்களை நேர் கொண்டு
பார்த்தவர் எவருமில்லை
என்னைப்போல் எவருமில்லை
எனக்கென்றோர் நண்பனில்லை
நான் அழுது நீ கேட்டதில்லை
என் கண்ணீர் நீ பார்ததில்லை
நானும் அழுவதுண்டு
எனக்காக நான் அழுவதில்லை மனிதா!
உனக்காக நான் அழுதேன்
உன் பசி கண்டு நான் அழுதேன்
உலகில் உன் வலி கண்டு நானழுதேன்
பழிவாங்கும் உன் குணம் கண்டு வெறுத்தேன்
பொய் பேசும் உன் புலன்களை
அழிக்க அழுதேன்
சுயநலப் போர்வைக்குள் நீ பேசும்
பொதுநலக் கொள்கைகளை கண்டு அழுதேன்
போகும் இடம் தெரிந்தும் உன் பொருள் சேர்க்கும்
முடிவில்லா மனம் கண்டு அழுதேன்
நெருப்பிற்குள் ஆவியாகும் என் கண்னீர்
அதை நான் மட்டும் பார்த்ததுண்டு
நான் நெருப்பில் பிறந்தவன்
நெருப்பாய் வாழ்பவன்
நான் வாழ்வது உலகத்திற்காக
நான் அழியும்போது இவ்வுலகமும் அழியும்
நிலாப் பாட்டு பாடும் பெண்ணே
ஏன் உனக்கு இத்தனை வெறுப்பு
உன் மழலைக்கு என்னையும் பாடு
நிலவிற்கு ஒளிகொடுத்து நீட்டிக் கொள்ளும்
என் சுயநலமற்ற வாழ்க்கையைப் பாடு
என் வாழ்வின் நெறியைப் பாடு
நான் செய்யும் கடமையைப் பாடு
என் நேரம் தவறாமையைப் பாடு
நிலவிற்கும் எனக்கும் பகை என்பார் கவிஞர்கள்
நீண்ட நெடும் கவி எழுதி
நிலமெல்லாம் பொய் சொல்வார்
போகட்டும் - கவியின் பொய்கள்
காயங்கள் செய்வதில்லை
என் ஒளியின் நாயகி - நிலவுக் காதலி
வருடத்தில் இருமுறை
என்னில் அவள் மறைவாள்
அவளில் நான் மறைவேன்
எங்களின் உயிர்கூடல், உலகிற்கு ஓர் அதிசயம்
அறிந்தவர் சிலருண்டு, அறியாதோர் ரசிப்பதுண்டு
வீழ்வேன் என்று நினைக்காதே
மழைக்காலம் வந்துவிட்டால்
மேகங்கள் என்னை மறைக்கலாம்
அது உங்கள் பார்வையில் - அவைகளோ
நான் படுத்துகிலும் பஞ்சு மெத்தைகள்
கரு மேகங்கள் என்னிடம்
குளிர் காய வந்த பறவைகள்
உனக்கு நான் புதிர் - இருளென்னும்
தீமையை நீக்க வந்த கதிர்
நான் இறைவனின் ஓர் அத்தாட்சி
(அவனை) பணிந்து நடக்கும் பெரும் படைப்பு
என்னைப் பார்த்து ஏன் திகைப்பு
நான் ஓர் ஆசிரியன்
இயற்கையின் தத்துவத்தில்
என்னை புரிந்துக் கொள்,
எனக்கு நீ பணிய வேண்டாம்
அறிவுக்கு வயதில்லை, அனுபவத்திற்கு முடிவில்லை
இயற்கையைப் புரிந்துக் கொள்
உலகமெனும் வகுப்பறையில்
நானும் ஓர் ஆசிரியன்.
ஓடிப் பிடித்து விளையாட
எனக்கும் ஓர் பகையுண்டு
இருள் என்னும் கரியவன்
எனக்கு முன் பிறந்தவன்
எனக்குள் அவன் அழிவானோ?
அவனில் நான் அழிவேனோ?
என் வாழ்வின் கேள்விக்கு
பதில் சொல்வார் யாருண்டு